உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் தவறானது என்பதை நியூஸ்வயர் செய்தி தளம் உறுதிப்படுத்தியுள்ளது.
உண்மையில் குறித்த காணொளி இலங்கையில் பதிவு செய்யப்பட்டதாகும்.
சிறுமி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்ற தலைப்புடன் பல தளங்களில் இந்த காட்சி பகிரப்பட்டுள்ளது. சில சர்வதேச ஊடகங்களும் இந்த தவறான தகவலை வெளியிட்டிருந்தன.
எனினும், ஜூன் 11 ஆம் திகதி ஒரு இலங்கையை சேர்ந்த பேஸ்புக் பயனரால் சிங்கள மொழி தலைப்புடன் முதன்முதலில் பதிவேற்றப்பட்டதே இந்த காணொளியின் ஆரம்ப பதிவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே கணக்கு சிங்கள மொழியில் தலைப்புகளுடன் சிறுமி மற்றும் முள்ளம்பன்றியுடன் கூடிய மேலும் பல காணொளிகளையும் பகிர்ந்துள்ளது.
குறித்த கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள இடம் பொலன்னறுவை,என்பது காணொளி இலங்கையில் பதிவு செய்தமையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அத்துடன் வங்கதேசத்தை சேர்ந்த உண்மை சரிபார்ப்பு நிறுவனமான ஸ்ட்ரீமும், இந்த வைரல் காணொளி இலங்கையில் படமாக்கப்பட்டதாக முடிவு செய்துள்ளது.
‘நிஜ டிஸ்னி தருணம்’ என பலராலும் வர்ணிக்கப்படும் இந்த காணொளி தொடர்ந்தும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று வருகின்றது.








