போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படும் ரூ. 57 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவுடன் பறிமுதல் செய்துள்ளனர்.
பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
உஸ்வெடகெயவ, புபுதுகமவை சேர்ந்த பெண் ஒருவர், 20 பரப்பு காணியில் ரூ. 50 மில்லியன் பெறுமதியான 2 மாடி வீடு ஒன்றையும், வத்தளை, நுகேபே, குஞ்சவத்த பகுதியில் 9.5 பரப்பு காணியில் ரூ. 7 மில்லியன் பெறுமதியான வீடு மற்றும் கடை ஒன்றையும் அமைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இரு சொத்துக்களும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் கட்டப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வெலிசரை நீதவான் நீதிமன்றம் நேற்று (08) இந்த சொத்துக்களை 7 நாட்களுக்கு பறிமுதல் செய்து, விற்பனை அல்லது பெயர் மாற்றம் செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
சந்தேக நபரான பெண் தற்போது குறித்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்ய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








