கொழும்பு பல்கலைக்கழகத்தின் 71 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கலைப் பீட மாணவர்கள் என்பதால், அவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அடுத்த ஒரு வாரத்திற்கு சில பீடங்களின் விரிவுரைகளை இணையம் (ஒன்லைன்) மற்றும் ஹைபிரிட் முறையில் நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த பல்கலைக்கழகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், வைத்தியசாலையில் உள்ள மாணவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உபவேந்தர் கூறினார்.

டெங்கு பரவல் ஏற்படும்போது ஓய்வு மிகவும் அவசியம் என்பதாலேயே விரிவுரைகளை இணைய முறைக்கு மாற்றியுள்ளதாக அவர் விளக்கினார்.

தற்போது பல்கலைக்கழகத்தில் உள்ள நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. எவ்வாறாயினும் காய்ச்சல் அறிகுறி இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பின்பற்றுமாறு மாணவர்களிடம் உபவேந்தர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் பல்கலைக்கழகத்தை மூடும் எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here