நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட ஆரம்ப கலவரத்தில் 3 கைதிகள் உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த 40 குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 3 அணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்தது.
நீதவான் ஷலானி பெரேரா முன்னிலையில் விசாரணை முன்னேற்றத்தை முன்வைத்த குற்ற புலனாய்வு பிரிவின் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு 1, இதுவரை 136 சிறை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப் படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
கலவரம் இடம்பெற்ற போது சிறையில் மொத்தம் 2,417 கைதிகளும் 166 சிறை ஊழியர்களும் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் கலவரம் ஆரம்பமானமதன் அடிப்படை காரணத்தை குற்ற புலனாய்வு பிரிவு பின்வருமாறு விளக்கியுள்ளது,
ஜூலை 5 ஆம் திகதி A1 சிறை பிரிவில் இருந்த கதுவெல்லேகம சுரேஷ் என்ற கைதி, வழக்கமான 30 நிமிட உடற்பயிற்சி நேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் கேட்டுள்ளார். அது மறுக்கப்பட்டதால் சிறை அதிகாரியை அச்சுறுத்தியுள்ளார்.
அடுத்தநாள் குறித்த சிறைப் பிரிவு (வார்டு) திறக்கப்பட்டபோது அதே கைதி A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுவே பெரிய கலவரத்திற்கு வித்திட்டதாக சி.ஐ.டி தெரிவித்தது.
ஆரம்பத்தில் எழுந்த வன்முறையில் 2 கைதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொத்தம் 36 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த கலவரம், பின்னர் சிறை முழுவதும் பரவியது. கைதிகள் சிறை மருந்தகம் மற்றும் நிர்வாக கட்டிடத்தை சேதப்படுத்தினர்.
ஜூலை 5 ஆம் திகதி மாலை நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸ் உதவி கோரப்பட்டது. இதனை அடுத்து நீர்கொழும்பு பொலிஸார் முதலில் வருகை தந்தனர். பின்னர் சிறை தலைமையகத்தில் இருந்து 89 பேர் கொண்ட விசேட அவசர அதிரடி பிரிவு வரவழைக்கப்பட்டது.
இரவு முழுவதும் கைதிகள் கூரைகளில் ஏறி திட்டமிடப்பட்ட முறையில் நடந்து கொண்டதாகவும் சி.ஐ.டி கூறியது.
மறுநாள் காலை சிற்றுண்டி வழங்க சென்ற அதிகாரிகளை “நாங்கள் தாக்க காத்திருக்கிறோம்” என கைதிகள் எச்சரித்துள்ளனர்.
காலை 10.30 முதல் 10.50 வரை நிலைமை மோசமடைந்தது. விசேட அதிரடி பிரிவினர் மீது கற்கள், மரக்கம்புகள், இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் உள்ளூர் அதிகாரிகள் வெளியேறி உள்ளனர் ஆனால் கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர்.
வன்முறை தீவிரமடைவதற்கு முன் சிறை ஆயுதக்கிடங்கின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்டது. மற்றொரு பகுதி கைதிகள் கைக்கு சென்றது. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கி முனை நீட்டப்பட்டது.
நிலமையை கட்டுப்படுத்த முதலில் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டதோடு அது பலனளிக்காததால் எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
பின்னர் நுழைவாயில் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தி விசேட அதிரடிப்படையினர் உள்ளே சென்று சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டனர் என நீதிமன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
F-58 தாக்குதல் துப்பாக்கி மற்றும் 1 மெகசின் மீட்கப்பட்டதோடு,271 வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன, சம்பவத்தின் போது வழங்கப்பட்ட 60 துப்பாக்கிகளும் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சிறையில் இருந்து கைப்பற்றப்பட்ட CCTV DVR கள் மொரட்டுவ பல்கலைக்கழக கணினி பரிசோதனை பிரிவுக்கு அனுப்பப்படும் எனவும் சேத மதிப்பீட்டு அறிக்கை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை, ஆயுதச் சட்டம் மற்றும் அரச சொத்து சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்கின்றன.மேலும் சட்டமா அதிபரின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் மேலும் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதவான் ஷலானி பெரேரா, கலவரத்தின் போது சிறையில் இருந்த ஒவ்வொரு கைதி பற்றிய அறிக்கையும், ஏனைய சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடம் வாக்குமூலம் பெறுமாறும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கியுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் தொடர்பாக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







