நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் முன்மொழிவு குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

நீதிமன்ற வழக்குகள் தேங்கியுள்ளமை, நீதி நிர்வாகத்தில் ஏற்படும் தாமதங்கள், நீதித்துறை அதிகாரிகளுக்கான பற்றாக்குறை, தொழில்வல்லுநர்களின் நாட்டை விட்டு வெளியேறுதல் மற்றும் மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலதிக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“அரசாங்கம் இன்னும் தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அமைச்சரவை ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையை மாத்திரமே நடத்தியுள்ளது. நீதி அமைச்சிடமிருந்து மேலும் தகவல்களை கோரியுள்ளோம்” என அவர் கூறினார்.

குறித்த முன்மொழிவு தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்துள்ளதாகவும், அவற்றையும் கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ கூறினார்.

மேலும், அதிக நீதித்துறை அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தினால் தொடர்ந்தும் வெற்றிடங்கள்  உள்ளன. 50 நீதவான்களை நியமிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 33 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here