‘‘மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருந்து விலகிப் போக முடியாது என்றும் அவற்றை நிறைவேற்றியே ஆக வேண்டும்’’ என்றும் சர்வசன அதிகாரம் கூட்டணியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (27/02/2025) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘இந்த வரவு செலவுத்திட்டம் எந்தத் திசையை நோக்கி நாட்டைக் கொண்டு போகின்றது என்று புரியவில்லை. எவ்வாறு இந்த வரவு செலவுத் திட்டம் முன்னிலையானது என்றும் புரியவில்லை. இந்த அரசாங்கம் சோஷலிச அரசாங்கம் என்று கிராமங்களில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
கிராமங்களில் உள்ளவர்களை எவ்வாறு மேலே கொண்டுவரப் போகின்றோம் என்றோ அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலோ வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் முன்னேற்றமடைய வேண்டும். இளைஞர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் அந்த கனவுகளுக்கு உயிர் கிடைக்குமா? உள்ள கனவுகளையும் கலைக்கும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
நீங்கள் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் கழுத்தை நெரித்தாலும் அதற்கு இடமளிக்காது அப்பாவிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். இந்நிலையில் இந்த அரசாங்கம் பழைய அரசியலையே செய்கின்றது. இவர்களின் அரசியலுக்குள் மறைந்துள்ள அரசியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயன்படுத்திக் கொண்டு செல்லப்படும் பயணத்தில் இந்த நாட்டை முன்னால் கொண்டு செல்ல முடியாது. மக்களின் எதிர்பார்ப்புகளை மேலே கொண்டுசென்ற உங்களுக்கு பெரும் பொறுப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புகளுடன் உள்ள மக்களை மகிழ்விக்கும் பொறுப்புள்ளது.
அவர்களின் சம்பளம், வறுமை நிலையில் உள்ளவர்கள், சுற்றுலாத்துறை ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் பாரிய மாற்றங்களை எதிர்பார்த்தனர்.
ஆனால், எதுவும் நடக்கவில்லை. உங்களின் அரசியல் இருப்புக்காக மட்டும் செயற்படுகின்றீர்கள். அரசியல் கலாசாரத்தை மாற்றுகின்றோம் என்று கூறி செலவுகளை குறைப்பதால் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நிதியை உருவாக்க வேண்டும். அதற்காக மனித மற்றும் பெளதீக வளங்களை பயன்படுத்த வேண்டும். அதற்காக மக்களை ஊக்குவிக்க வேண்டும். ஜனாதிபதி பயணச் செலவுகளில் கூர்மையான வீழ்ச்சியைக் காட்டும் வகையில், ஜனாதிபதி எவ்வாறு 18 இலட்சம் ரூபாவில் மூன்று நாடுகளுக்குச் செல்ல முடிந்தது?
வெளிநாட்டு பயணச் செலவுகள் குறைக்கப் பட்டுள்ளதாக பிரதமர் கூறுகிறார். இவ்வளவு குறைந்த தொகையுடன் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மிதிப் பலகையிலா பயணம் செய்தார்? கடந்த ஐந்து மாதங்களாக பதவியில் இருந்தபோது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்தார். செலவுகளைக் குறைப்பது மட்டும் இலாபத்தை ஈட்டாது. வருவாய் ஈட்டுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். பட்ஜெட் பற்றாக்குறையை எவ்வாறு சமன் செய்வது? எமது கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவோம்? நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது’’ – என்றார்.








