Tamil News Channel

Blog Post

Tamil News Channel > புதிய செய்திகள் > கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!

கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவு ரங்கன் குடியிருப்பு பகுதி மக்கள் தமது கிராமத்தின்  வீதி மற்றும் பாலத்தினை புணரமைத்து தருமாறு கூறி கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக     ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது அவர்கள் தெரிவிக்கையில் கடந்த 2021ஆம் ஆண்டு முன்னைய அரசாங்கத்தினால்  அப்பகுதியில் காணப்பட்ட சிறிய பாலத்தை உடைத்து அனைவரும் பயன்படக்கூடிய வகையில் பெரிதாக ஒருபாலம் கட்டித் தருவதாக கூறி அப்பகுதியில் அடிக்கலும் நாட்டப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரையில் எந்தவிதமான புனரமைப்பு பணிகளும் இடம்பெறாத நிலையில் அப்பகுதியில் இருந்த வீதியும் தற்பொழுது கால்வாயாக மாறி உள்ளது.

இதன் காரணமாக பலர் தமது அன்றாட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பல மைல்  தூரம் சென்று சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் வயோதிபர்கள் என பலரும் பல மைல் தூரம் சுற்றி தமது நாளாந்த கடமையை முன்னெடுக்க வேண்டி உள்ளதாகவும் அத்தோடு அப்பகுதியின் தற்பொழுது மாற்றுப் பாதையை பயன்படுத்தி வருகின்றார் அந்த பாதையும்  தனியார் ஒருவரது காணியை ஊடறுத்து செல்வதன் காரணமாக தற்பொழுது காணி உரிமையாளர் அந்த பாதையை பாவனைக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து வருகின்றார்.

இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் 96 குடும்பங்களுக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்  இவ்விடயம் தொடர்பாக இன்றைய தினம் கண்டாவளைப் பிரதேச செயலாளரை பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று வினவிய போது  சம்பந்தப்பட்ட திணைக்களமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் இன்றும் மக்களின் போராட்டம் தொடர்பாகவும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள மாற்று வீதி கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் தற்பொழுது வரை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக அவ்வீதியை மக்களின் பாவனைக்காக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  2016 ஆம் ஆண்டு காலப் பகுதியின்  வரைபடத்தில்  பாதையுள்ளதாகவும்  எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன்  கலந்துரையாடி உரிய பாதையினை மக்கள் பாவனைக்கு வழங்கி புனரமைப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

(கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *