அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் 2 வது போட்டி நேற்றைய தினம் (26) திருவனந்தபுரத்தில் நடைபெற்றிருந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி வழங்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அதிக பட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 58 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் நாதன் எல்லிஸ் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை அவுஸ்திரேலிய அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
236 என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியிருந்தது.
அவுஸ்திரேலிய அணிக்கு அதிக பட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 45 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் ரவி பிஸ்னொய் மற்றும் பிரசித் கிரிஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவுசெய்யப்பட்டார்.
2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடரின் அடுத்த போட்டியானது நாளை (28) மாலை 7 மணிக்கு அஸ்ஸாமில் பர்ஸபரா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.