அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டில் பங்கேற்கும் 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
20 ஆவது மற்றும் கடைசி அணியாக உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது.
இதில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் உகண்டா தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
நமீபியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் மூலம் ஏற்கனவே நமீபிய அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நிலையில் சிம்பாப்வே மற்றும் கென்யா அணிகள் தகுதியை இழந்தன.
உகண்டா இந்தத் தொடரில் ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றியடைந்து முதல் இரு இடங்களுக்கு முன்னேறியதை அடுத்து உலகக் கிண்ண தகுதியை உறுதி செய்தது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க அணிகள் தொடரிற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு இடங்களை பிடித்த இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு ஏற்கனவே தகுதியை உறுதி செய்திருந்தன.
டி20 தரவரிசையில் அடுத்து உச்ச தரநிலையை பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றன.
பிராந்திய மட்டத்தில் இடம்பெற்ற தகுதிகாண் தொடர்கள் மூலம் ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து ஸ்கொட்லாந்து அணியும் கிழக்காசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து பப்புவா நியுகினியா அணியும் தேர்வாகியுள்ளனர்.
அமெரிக்க தகுதிகாண் சுற்றில் வெற்றியீட்டிய கனடா உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றதுடன் ஆசிய தகுதிகாண் சுற்றின் மூலம் நேபாளம் மற்றும் ஓமான் அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறின.
2024 ஜூன் 3 தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் 20 அணிகளையும் ஐந்து அணிகள் என நான்கு குழுக்களாக பிரித்து ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
சுப்பர் 8 சுற்றில் நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களில் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.