தலையநகரில் 18 வருடங்களாக இயங்கி வரும் அமேசன் கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தின் (Amazon College & Campus) பட்டமளிப்பு விழா நேற்று 17 நடைபெற்றது.
கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் (BMICH) லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 200 பட்டதாரிகளின் கல்விச் சாதனைகள் கௌரவிக்கப்பட்டன.
டிப்ளோமா, உயர் தேசிய டிப்ளோமா (HND), இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் மற்றும் கலாநிதிப் பட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வித் திட்டங்களை நிறைவு செய்த பட்டதாரிகள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
பட்டதாரிகள், அவர்களது குடும்பத்தினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்வித்துறைப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சிறப்புமிக்க பிரமுகர்கள், கல்வியாளர்கள், தொழில்முறை பிரதிநிதிகள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டதுடன், இது நிகழ்விற்கு கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் வழங்கியதாக அமேசன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான நேபாள உயர்ஸ்தானிகர் விஜயகுமார் ராவத் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவருமான உதயகுமார அமரசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவரான பேராசிரியர்பரீனா ரூஷாய்க் இலங்கை அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஷாம் நவாஸ் மற்றும் தொழில்துறை நீதிமன்ற நீதிபதியும் களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் காஞ்சனா சில்வா ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.
கல்வித்துறையில் சுமார் 18 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட அமேசன் கல்லூரி மற்றும் வளாகம், இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் (TVEC) பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.
கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்நிறுவனம் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.
மேலும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் கொண்டுள்ள இணைப்புகளின் ஊடாக, அமேசன் கல்லூரி மற்றும் வளாகம் பல்வேறு கல்வித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தமது கல்வி மற்றும் தொழில்சார் இலக்குகளை அடைவதற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
விழாவில் உரையாற்றிய அமேசன் கல்லூரி மற்றும் வளாகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார், கல்வியால் வாழ்க்கையை மாற்றியமைக்கவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என்பதை வலியுறுத்தினார்.
“கல்வி என்பது ஒரு தகைமையைப் பெற்றுக்கொள்வதுடன் மட்டும் முடிவடைவதில்லை. அது புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்து, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு பாதையாகும். எமது ஒவ்வொரு பட்டதாரியின் சாதனைக்குப் பின்னாலும் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தியாகம் உள்ளன. அவர்களது சாதனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். தரமான கல்வியின் மூலம் எதிர்காலத் தலைமுறையினரை வலுப்படுத்துவதில் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்,” என அவர் தெரிவித்தார்.








