வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை நேற்று கைது செய்திருந்தனர்.
கடந்த 20 ஆம் திகதி வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 2 பெண்களிடம் இருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 69 வயதுடைய பெண்ணும் கசக்கஸ்தானை சேர்ந்த அவரது மருமகளும் வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் இந்த விடயம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவந்துள்ளனர்.
பின்னர் இந்த விடயம் குறித்த விசாரணைகளைப் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த துப்பாக்கி தொடர்பான பல விடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருந்தன.
இதனடிப்படையிலேயே, தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது சமையல்காரரின் மூலம் அந்தத் துப்பாக்கியை ஹெவ்லோக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தமது நண்பரின் வீட்டுக்கு அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.








