October 8, 2025
இலங்கையில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Oct 7, 2025

இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளன. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் நோய்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது. இதனால் சிறிய நோய்கள்கூட மரணத்துக்குக் காரணமாகும்.

எச்.ஐ.வி நோய் பரவுவதற்கான முக்கியமான வழிகள் பாலியல் உறவு, ஒரே ஊசியை பலர் பயன்படுத்துவது மற்றும் கர்ப்பிணி தாயிடமிருந்து குழந்தைக்கு பரவல் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் 411 பேரும், 2022 இல் 607 பேரும், 2023 இல் 697 பேரும், 2024 இல் 824 பேரும் எச்.ஐ.வி நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்தமாக இதுவரை இலங்கையில் 6,740 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் எனவும், விகிதம் 7:1 எனவும் கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 47 பேர் எயிட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை குறைந்த எச்.ஐ.வி பாதிப்பு உள்ள நாடாக இருந்தபோதிலும், கடந்த ஆண்டில் புதிய தொற்றுகள் அதிகரித்திருப்பது கவலைக்குரியதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் இலவச மற்றும் ரகசிய சோதனை, சிகிச்சை சேவைகளை வழங்கி வருகிறது.

இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

எயிட்ஸ் தொடர்பான சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொலைபேசி இலக்கம் +94 703 733 933 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *