‘சிரிலிய சவிய’ கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஷிராந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று (12) சிறையில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
மேலும் அவர் தற்போது திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அங்கு முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், சந்தேக நபர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை உண்மை எனவும் , அவரை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவது தொடர்பாக எந்த தகவலும் சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கமைய திறந்த நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகளை அழைத்த பிரதான நீதவான், இன்று ஷிராந்தி ராஜபக்ஷ திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறாரா என்பதை உடனடியாக விசாரித்து தெரிவிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இதனை அடுத்து சிறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 61 வது வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை தவிர, அவரது நோய் நிலை அல்லது அறுவை சிகிச்சை தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதன்படி சிறை அதிகாரிகளால் அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை வழக்கு இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.








