இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற அரசியல் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் விளைவாக அரசியல் கைதிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை மீண்டும் மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற கருத்தும் அரசாங்கத்திற்கு இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இலங்கை அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த பிளவுபட்ட நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
“இந்தப் பிரிவுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதே எங்களின் முக்கிய குறிக்கோள். ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும்? சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களையும் தலைவர்களையும் கொண்ட இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். அந்த இயக்கம்தான் தேசிய மக்கள் சக்தி” என்றார்.
புதிய நாட்டைக் கட்டியெழுப்புமாறு பொதுமக்களை வலியுறுத்திய ஜனாதிபதி திஸாநாயக்க, “புதிய தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம்” என்றார்.








