மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா அப்பேரல் எக்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களின் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை மக்கள் வங்கி விற்பனை செய்யலாம் (ஏலத்தில் விடலாம்) என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனங்கள் 1.42 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக, சுமார் ரூ. 42 கோடி கடன்களை பெற்று உரிய தவணையில் திருப்பி செலுத்தாதுள்ளன.

இந்த நிலையிலேயே முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினருமான தயா கமகேவின் குறித்த நிறுவனங்கள் அடகு வைத்த சொத்துக்களை, மக்கள் வங்கி ஏலத்தில் விடலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2021-ல், மக்கள் வங்கியில் ரூ. 5,400 கோடி வரை திருப்பி கிடைக்காத கடன் இருப்பதாக சாணக்கியன் எம்.பி அம்பலப்படுத்தி இருந்தார்.

அத்துடன் அரசியல் பலம், செல்வாக்கு உள்ள நபர்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்த பல ஆண்டுகள் அவகாசம் கிடைக்கும்போது, ​​சாதாரண மக்கள் சிறு கடன்களுக்காக உடனடியாகத் தண்டிக்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்றம் வெளியிட்ட இந்த தீர்ப்பை அவர் வரவேற்றுள்ளார்.

குறித்த ஏலத்தை நிறுத்த தயா குழுமம் நீதிமன்றத்தை நாடிய போதும், அந்நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியமை, தொடர்ந்து அவகாசம் கேட்டமை, ஏலத்தைத் தாமதப்படுத்தியமை, மேலும் வங்கியை எதிர்த்து வழக்குத் தொடுப்பதற்கு முன் 1 வருடம் 8 மாதங்கள் தாமதித்தமை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

எவ்வாறாயினும் மேலும் பல பாரிய கடன் பெற்றவர்களிடம் ஏராளமான சொத்துக்கள் உள்ள போதும் அவர்களின் கடன்கள் திருப்பி செலுத்தப்படாமல் இருப்பதாகவும் கோப் குழு அவர்களை கண்டறிந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாணக்கனியன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் வங்கிகள்,நிதி நிறுவனங்கள் அனைவருக்கும் ஒரே கடன் விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here