திறைசேரி அமைப்பில் ஊடுருவி இணையவழி மூலம் பணத்தை கொள்ளையடித்த சம்பவமானது, ஒரு நேரடி ஊடுருவலை விட, நுட்பமான ஃபிஷிங் (நம்பகமான நிறுவனம் போன்று செயற்பட்டு டேட்டா களவாடுதல்) மற்றும் ஆள்மாறாட்ட மோசடி என நம்பப்படுவதாக டிஜிட்டல் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட சர்வதேச நிறுவனத்தைப் போன்ற போலி டொமைன் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மோசடிக்காரர்கள் உருவாக்கியுள்ளதாகவும், உண்மையான அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி பணம் செலுத்த வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணம் எங்கு சென்றது என்பதைக் கண்டறியவும், இதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணவும், இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளுடன் விசாரணைகள் நடைபெற்று வருவதாக வீரரத்ன தெரிவித்துள்ளார்.
பரிவர்த்தனையால் ஏற்பட்ட வங்கித் தடங்கள் மூலம் நிதியை மீட்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி 2026 வரை திறைசேரியின் மின்னஞ்சல் அமைப்பில் ஊடுருவி, அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹேக்கர்கள் கொள்ளை அடித்த சம்பவம் அண்மையில் தெரியவந்தது.
இது தொடர்பில் அரசாங்கம் தற்பொழுது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.








