தேசிய கட்டமைப்பு இயக்க நிறுவனத்தால் (NSO) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப விசாரணை அறிக்கையின்படி, நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் முதலாவது அலகில் இருந்து 187 மெகாவாட் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதே அக்டோபர் 17 அன்று நாடு முழுவதும் மின் கட்டமைப்பு செயலிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி அலகு காலை 11.43 மணியளவில் 450 மில்லி விநாடிகளுக்குள் துண்டிக்கப்பட்டதால், கட்டமைப்பின் அதிர்வெண் 48.75 ஹெர்ட்ஸாக குறைந்ததாக அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாக, முழு தேசிய மின் கட்டமைப்பும் 4.1 விநாடிகளுக்குள் செயலிழந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.
கட்டமைப்பை நிலைப்படுத்தும் முயற்சியில் குறைந்த அதிர்வெண் சுமை குறைப்பு (UFLS) பொறிமுறையின் ஐந்து நிலைகளும் செயல்படுத்தப்பட்டன. இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிவைத் தடுக்கத் தவறியதால், மின் தடைக்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட 1,135 மெகாவாட்டில் 449.2 மெகாவாட் அல்லது 39.6% துண்டிக்கப்பட்டது.
விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவெவ மற்றும் லக்ஸபான உள்ளிட்ட பல நீர் மின் நிலையங்களில் உள்ள மின் உற்பத்தி அலகுகளும் அவற்றின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மூடப்பட்டன.
சம்பவத்திற்குப் பிறகு தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் உடனடியாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. மகாவலி, லக்ஸபான, சமனலவெவ/தெற்கு மற்றும் கொழும்பு ஆகிய நான்கு கட்டமைப்புகள் ஊடாக பல நீர் மின் நிலையங்கள் மற்றும் களனிதிஸ்ஸ மின் நிலையத்தைப் பயன்படுத்தி மின்சார விநியோகம் மீட்டெடுக்கப்பட்டது.
அனைத்து பிரதான துணை மின் நிலையங்களும் மாலை 4.58 மணிக்குள் மீட்டெடுக்கப்பட்டன, அதே நேரத்தில் தேசிய மின் பரிமாற்ற கட்டமைப்பின் முழுமையான மறுசீரமைப்பு ஐந்து மணி நேரம் 15 நிமிடங்கள் எடுத்ததாக அறிக்கை கூறுகிறது.
மறுசீரமைப்பு செயல்பாட்டின் போது சில மின் உற்பத்தி அலகுகளில் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் செயல்பாட்டு தாமதங்களும் ஏற்பட்டன. துணை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக யுகதனவி மின் நிலையத்தில் மின் உற்பத்தி அலகு ஒன்றை மீண்டும் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும்,நுரைச்சோலை அலகு திடீரென துண்டிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணத்தை ஆரம்ப விசாரணையில் அடையாளம் காண முடியவில்லை.
விரிவான விசாரணை அறிக்கை பின்னர் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் தெரிவித்துள்ளது.








