புயல் மற்றும் கடும் மழை காரணமாக கழிவு குழாய்கள் அடைப்பட்ட நிலையில் நியூஸிலாந்து தலைநகரமான வெலிங்டன் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிகால்களில் தேங்கியுள்ள கழிவு நீர், கழிவு பொருட்கள் என்பன வெள்ளத்தில் கலந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐலண்ட் பேயில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் புயல் காரணமாக கழிவுநீர் பிரதானக் குழாய் அடைபட்டு அங்குள்ள 5 வீடுகளில் மனித கழிவு, செனிட்டரி நெப்கின்கள் மற்றும் பழுப்பு நிற நீர் வெள்ளத்தில் புகுந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வெலிங்டன் சுத்திகரிப்பு குழுவினர் மற்றும் கழிவுகளை உறிஞ்சும் லொரிகள் சம்பவ இடத்தில் உள்ள வீடுகளைக் கிருமி நீக்கம் செய்து வருகின்றனர்.
அந்த நாட்டின் மோவா பொய்யிண்ட் சுத்திகரிப்பு நிலையம் பெப்ரவரியில் ஏற்பட்ட புயலில் பழுதடைந்துள்ளதால் பல மாதங்களாக மில்லியன் கணக்கான லீட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கடலில் கலந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த கடற்பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை நீச்சல், சர்ஃபிங், கயாக்கிங் போன்றவற்றில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதி ஏற்கனவே கழிவுநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த சீரற்ற காலநிலை மேலும் மோசமாக்கியுள்ளது எனவும் இந்த சுத்திகரிப்பு நிலையம் முழுமையாகச் சரிசெய்யப்படும் காலம் குறித்து தற்போது கூறமுடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








