நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சூழல் தற்போது பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், பெண் கைதிகள் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல்களில் படுகாயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 05 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவான மற்றும் எதிரான கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன் 34 பேர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 06 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 17 கைதிகள் என மொத்தம் 24 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து சுமார் 700 கைதிகள் பாதுகாப்புக் கருதி அங்குணுகொலபெலஸ்ஸ,தும்பறை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றிலும் இது குறித்த விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.

இதேநேரம் சிறைச்சாலை வன்முறை தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மிலிந்த குணதிலக மற்றும் மோகன் வீரகோன் ஆகியோரை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை அமைச்சரவை நியமித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று (07) இடம்பெறவுள்ளதுடன், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக அவர்களது உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here