பேலியகொடை, பெத்தியாகொட பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 4,250 மெட்ரிக் தொன் சீனியை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (06) முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000 சீனி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடுவலை, அத்துருகிரிய (அங்கொட), பிலியந்தலை மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சீனி கையிருப்பு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த களஞ்சியசாலையில் காலாவதியான சீனியை புதிய பொதிகளில் அடைத்து சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த களஞ்சியசாலை, அதிகாரிகளால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளது.








