தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் இன்று (16) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு இன்று நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நயனதாரா பாலபடபெந்தி இதனைத் தெரிவித்தார்.

இந்த மனு ஷிரான் குணரத்ன, கலாநிதி சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அரச சிரேஷ்ட சட்டத்தரணி, தற்போதுள்ள சம்பள சபையின் காலம் முடிவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அதன்படி, புதிய சம்பள சபை ஒன்றை நியமித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடி தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட மனுவை பெப்ரவரி 25 ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியம் தமக்கு கிடைக்காததன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி, அதற்காக பொருத்தமான நிவாரணம் வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தது.

மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here