மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று (13)வத்தேகம – யட்டிரவண வீதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இவ்வாறு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.
பொலிஸ் அவசர அழைப்பு எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தேகம பொலிஸ் குழுவினர் குறித்த இடத்திற்கு சென்று சிறுமியை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
காலை 7 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் இவ்வாறு சிறுமியை அங்கு விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தையை அழைத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி தொடர்பில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சிறுமிக்கு தனது குடும்பம் அல்லது வசித்த இடம் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








