யாழ். மாவட்டத்தில் விவசாய அமைப்புக்களை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (09.05.2025) இடம்பெற்றது.

அரச சார்பற்ற நிறுவனமான ‘அவங்க லங்கா’ விவசாய அமைப்புக்களை வலுப்படுத்தும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. அதன் நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவே ஆளுநர் தலைமையில் இன்றைய தினம் கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், திட்டத்துக்கான நிதியை அரச சார்பற்ற நிறுவனமே கொண்டு வரவேண்டும் என்றும் அரசாங்க நிதி வழங்கமுடியாது எனவும் குறிப்பிட்டார். அதேநேரம், சில திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள் உரிய வேலைகளின்றி இருக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அப்படியானவர்களே தங்களுக்குரிய சலுகைகளைக் கோருகின்றனர் எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் அரசாங்கப் பணியாளர்களுக்கு இலக்கை நிர்ணயித்து அதை அவர்கள் உரிய காலத்தில் அடைந்தால் மாத்திரமே சம்பள உயர்வுக்கு பரிந்துரைக்க முடியும் என்பதை எழுத்தில் வழங்குமாறும் திணைக்களத் தலைவர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ‘அவங்க லங்கா’ நிறுவனத்தினர் யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளாக தங்களால் அடையாளப்படுத்தப்பட்டவற்றையும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆளுநர் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலில், அமைச்சுச் செயலர், மாகாணப் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here