அரசுத் துறைகள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் சுமார் 10,000 நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரயில்வே கடவை காவலர்களின் கொடுப்பனவை ரூ.7,500 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் கடவைகளில் நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாது. அதற்கான நீண்டகால திட்டம் அவசியம் உள்ளது.
அரசாங்கம் ஒவ்வொரு மட்டத்திலும் நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 9,800 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை மேம்பாட்டு ஆணையத்தில் (RDA) 700 பேருக்கு ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் 300 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது அவசியம். இதே தகுதி ரயில்வே கடவை காவலர்களுக்கும் பொருந்தும்.
அனைவரையும் ஒரே நேரத்தில் நிரந்தரப்படுத்த முடியாது என்றாலும், அரசாங்கம் சுமார் 10,000 பேரை பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.” என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் தற்காலிக மற்றும் நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு வழங்கும் அரசின் முடிவு பலருக்கு நம்பிக்கை அளித்துள்ளது.








