“இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு” (Awareness by the Sri Lanka Police Department) என்ற தலைப்பின் கீழ் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்றும், அவை பொதுமக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதாகவும் பொலிஸ் எச்சரித்துள்ளது.
அனைத்து உத்தியோகபூர்வ விழிப்புணர்வு செய்திகளும் பொலிஸ் ஊடகப் பிரிவினால் (Police Media Division) முறையான கடிதத் தலைப்பின் (letterhead) கீழ் மட்டுமே ஊடக அறிக்கைகளாக வெளியிடப்படும் என்று பொலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
தினசரி செய்திகள் மற்றும் அறிவிப்புகள் பொலிஸ் ஊடகப் பிரிவினால் நிர்வகிக்கப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகள் மற்றும் channels மூலம் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
பொலிஸாரால் வெளியிடப்பட்டது போன்று போலியாக பதிவுகளை பரப்புபவர்கள் குறித்தும், அது ஏதேனும் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கையா என்பது தொடர்பாகவும் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சமூக வலைதள பதிவுகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஊடக வழிகளை மட்டுமே நம்புமாறும் பொலிஸ் வலியுறுத்தியுள்ளது.








