நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (மே 8) 27,615 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவற்றில் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மொத்தம் 540 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், 21 நபர்கள் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதொடு நிலுவையில் உள்ள பிடியாணையுடன் இருந்த 134 நபர்கள் உட்பட, 248 பிடியாணை சந்தேக நபர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இதேநேரம் மதுபானம் அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய 76 நபர்களும், அலட்சிய போக்கில் வாகனம் செலுத்திய 49 நபர்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.
அத்துடன் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,146 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை மேலும் கூறியுள்ளது.
நேற்று மாத்திரம் நடத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், 1 கிலோகிராம், 513 கிராம் ஹெரோயின் மற்றும் “ஐஸ்” என்று அழைக்கப்படும் 4 கிலோகிராம், 467 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட 796 சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 817 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.








