முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் மே 12 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக, ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு இன்று (மே 9) கடிதம் வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான போதும் அந்த நேரத்தில் எந்த அதிகாரப்பூர்வ கடிதமும் வழங்கப்படவில்லை என பொதுஜன பெறமுன் எம்.பியான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஏர்பஸ் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேனவின் மறைவுக்கு 24 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த சமீபத்திய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் தாம் 2 மில்லியன் டொலர்களை பெற்றதாகவும் அதில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு 60 மில்லியன் ரூபாய் வழங்கியதாகவும் கபில சந்திரசேன நீதிமன்றில் கூறியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here