அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் இன்று (13) ஐந்து மாணவர்களைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த தொழில்நுட்ப உயர் நிலை மாணவர்கள் அனைவரும் சாதாரண காயங்களுடன் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர் அதே பாடசாலையில் பயிலும் 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவருக்கும் காயமடைந்த மாணவர்களில் ஒருவருக்கும் இடையே ஏற்கனவே ஏற்பட்ட தகராறு, இன்று காலை தொடர்ந்ததால் கத்தித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் மற்றுமொரு மாணவரைத் தாக்கிய நிலையில், தலையிட முயன்ற மேலும் நான்கு பேரும் காயமடைந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர் ஆயுதத்துடன் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







