தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காக, விவசாயம் மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியன இணைந்து ஒரு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளன.
இந்தத் திட்டம் தேயிலைத் தோட்டங்களிலும் தேயிலைத் தொழிற்சாலைகளிலும் பணபுரியும் தனிநபர்களை உள்ளடக்கும் எனவும் மேலும் ஒவ்வொரு தொழிலாளியின் நிதித் திறனுக்கு ஏற்ப பங்களிப்புகள் சீர்செய்யப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 18 வயதில் இணையும் ஒருவர் காலாண்டுக்கு ரூ. 600 பங்களிக்கலாம், (3 மாதங்களுக்கு ஒருமுறை) இதற்கமைய 60 வயதை எட்டும்போது, 5,000 ரூபாய் மாத ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
பங்களிப்புகளின் அளவைப் பொறுத்து, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 மற்றும் அதற்கு மேற்பட்ட மாதாந்திர ஓய்வூதியங்களைப் பெறலாம், மேலும் பங்கேற்பாளர்கள் எந்த நேரத்திலும் தங்கள் காப்பீட்டு தொகையை அதிகரிக்க வசதிகள் உள்ளன.
இந்தத் திட்டத்தில் ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பும் அடங்கும் என அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
காப்பீட்டு பங்களிப்பாளர் ஒருவர் திடீரென விபத்தில் பாதிக்கப்பட்டாலோ அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்பு இறந்தாலோ, இழப்பீடு வழங்கப்படும்.
அத்துடன் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும்போது ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால், அவரது வாழ்க்கைத் துணை தொடர்ந்து ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வைப் பாதுகாப்பதும், அவர்களால் இனி வேலை செய்ய இயலாத நிலையில் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.








