தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி நோக்கி பஸ் மூலம் பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று அதிகாலை இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதான சந்தேக நபர் முகக் கவசம் அணிந்திருந்ததாகவும் அவரது மனைவி இஸ்லாமிய பெண் போன்று பர்தா அணிந்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கடந்த சில நாட்களாக நீர் கொழும்பு மற்றும் சிலாபம் கடலோர பகுதிகளில் தலைமறைவாக இருந்ததோடு அங்கிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சித்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒழுகலவின் நேரடி மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத 17 ஆம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மீட்கப்பட்ட சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய சம்யா தர்ஷினி எனப்படும் இயன் மருத்துவருடையது என அடையாளம் காணப்பட்டது.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பெண்ணின் காதலன் என நம்பப்படும் பேராதனை கன்னொருவ பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவரால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்த தனது சகோதரி சில நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை எனவும் அது குறித்து ஆராயுமாறும் சகோதரர் கடந்த ஜூன் 17ஆம் திகதி நுவரெலிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசோதித்த போது ஜூன் 16ஆம் திகதி இரவு சந்தேக நபர் குறித்த பெண் தங்கி இருந்த குடியிருப்புக்கு வந்துள்ளதுடன் சிறிது நேரத்தில் சுய நினைவற்ற நிலையில் பெண்ணை அழைத்த சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுவரெலியா பொலிசாரிடம் ஒப்படைக்கபப்ட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








