ஜூன் மாத மழைக்கால சூழ்நிலையால் இலங்கையில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 53,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, ஜூன் மாதம் மாத்திரம் 19,318 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனால் 2026 ஆம் ஆண்டின் 25ஆவது வாரம் வரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,159 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை டெங்கு நோயால் 31 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாதாந்த பாதிப்பு 10,000க்கும் குறைவாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
நாட்டில் அதிக பாதிப்பு மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 27,833 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 52.36% ஆகும்.
மொத்தமாக 124 சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் MOH பிரிவுகள் அதிக ஆபத்து வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்பு இனப்பெருக்க இடங்களை அழிக்குமாறும், லார்வா மற்றும் பியூபா நிலைகளை அழித்து பரவலை கட்டுப்படுத்துமாறும் பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.








