முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு வாகன கடத்தல் மோசடி குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் [CID] விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமான `தினமின` பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அல்லது அவரது மகனின் பெயர் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சுங்க வரி இன்றி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக `தினமின` தெரிவித்துள்ளது.
சில வாகனங்கள் கப்பல் கொள்கலன்களுக்குள் மறைத்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், அவற்றில் சில அரசியல் செல்வாக்குள்ளவர்களின் பிள்ளைகளால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளின் உதவியுடன் இந்த வாகனங்களில் சில பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு பதிலாக, பின்னர் சுங்க வரியை மாத்திரம் செலுத்திய சம்பவங்களும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் `தினமின` குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் குற்ற புலனாய்வு பிரிவால் முன்னர் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வாகனம் தற்போதும் அவர்களின் காவலில் உள்ளதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் மகன் அடுத்த வாரம் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்படுவார் எனவும் அறிக்கை கூறுகிறது.
இந்த விசாரணை தொடர்பில் பொலிஸாரோ அல்லது புலனாய்வு பிரிவோ இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








