ஒகஸ்ட் 14 அதாவது நாளை நடைபெறவிருக்கும் க.பொ.த உயர்தர (A/L) இயற்பியல் (பிசிக்ஸ்) பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இன்று (13) அம்பலாந்தோட்டையில் உள்ள உயர்தர பரீட்சை நிலையம் ஒன்றில் கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து, கல்வி அமைச்சு விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பொதிகள், அம்பலாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமாக செயல்படும் இடத்தில், வினாத்தாள் கொள்கலன் ஒன்றின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இசை, நடனம் மற்றும் விவசாயம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகளுடன், இயற்பியல் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகளும் இருந்தன என அதிகாரிகள் கூறினர்.
எனினும், இயற்பியல் வினாத்தாள் அடங்கிய பொதிகள் எதுவும் பிரிக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், அம்பலாந்தோட்டை பரீட்சை நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.







