கல்குடா மற்றும் ஓட்டமாவடியில் இடம்பெற்ற ‘புலுவன் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08.09) காலை காத்தான்குடி-05 இல் அமைந்துள்ள பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் அலீம் வலியுல்லாஹ், அறங்காவலர்களின் தலைவர் அப்துர் ரவுப் மிஸ்பாஹி மற்றும் கலந்து கொண்ட ஏனையவர்களுடன் சுமுக உரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதியுடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் அலி சாஹிர் மௌலானா, முன்னாள் பிரதி மேயர் எம்.எம். ஜசீம் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
காத்தான்குடியில் உள்ள பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் இரண்டு ஜும்மா பள்ளிவாசல்கள், நாடு முழுவதுமுள்ள மற்ற நான்கு பள்ளிவாசல்கள், ஏழு குர்ஆன் பள்ளிகள், இரண்டு அரபிக் கல்லூரிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறது.
பள்ளிவாசலுக்கான தனது பயணத்தின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க காத்தான்குடியில் உள்ள வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை சேகரித்தார்.







