தலைக்கு குளிப்பதற்கு நம் முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருந்தார்கள். ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து கட்டாயம் குளிக்க வேண்டும் என்பது அப்போது பின்பற்றப்பட்ட ஒன்று. அது நாளடைவில் நாம் மறந்து போன ஒன்றும் கூட. எண்ணெய் வைப்பது குளிப்பதை மறந்தோம், அதோடு தலைக்கு எண்ணெய் வைப்பதே மறந்து போய்விட்டது பலருக்கு.
தலைக்கு குளிக்கும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற விடவேண்டும். குளிக்கும் போது நேரடியாக ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என பலவற்றை நாம் அறிந்திருப்போம். ஆனால் நாம் தலைக்கு குளிக்கும் போது கட்டாயம் தவிர்க்க வேண்டியவை.
முரட்டுத்தனமாக தேய்ப்பது தலைக்கு ஷாம்பு தேய்த்து குளிக்கும் போது மென்மையாக தேய்க்க வேண்டும். சீக்கிரம் குளிக்க வேண்டும் என்கிற அவசரத்தில் தலை முடி மற்றும் உரோமக்கால்களில் கடினமாக தேய்க்கும் போது முடியில் வெவ்வேறு திசையில் நகர்வு ஏற்படுவதால் உடைகிறது. இது முடியை சேதப்படுத்தி முடி உதிர்விற்கும் வழிவகுக்கிறது.

அதே போல் தலையை துவட்டும் போதும் மென்மையான துண்டை உபயோகித்து லேசாக ஒற்றி எடுக்க வேண்டும். அதிக முறை ஷாம்பு பயன்படுத்துவது பெரும்பாலானவர்களுக்கு தலைக்கு குளிக்கும் போது அதிக முறை ஷாம்பு பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. தலையில் அதிக அளவில் அழுக்கு சேர்ந்திருப்பதாக நினைத்து கொண்டு ஒன்றிற்கும் மேற்பட்ட முறை ஷாம்பு உபயோகித்து தலை முடியை அலசுவார்கள். இது தலையின் மேற்பரப்பில் இருக்கும் நன்மை செய்யும் பாக்ட்டீரியாவை அழிக்கின்றன. இதனால் முடி பாதிப்படைவதோடு வறட்சியையும் ஏற்படுத்தும்.
கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருப்பது தோராயமாக 60% மக்கள் ஷாம்பு பயன்படுத்திய பின் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதில்லை என்கிறது ஆய்வு முடிவுகள். தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்துவது அவசியம் என நினைக்கும் பலரும் ஷாம்புவிற்கு பின் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை. இந்த அறியாமை இன்னும் சில பகுதிகளில் இருக்க தான் செய்கிறது. ஷாம்புவிற்கு பின் கண்டிஷனர் பயன்படுத்துவது கூந்தலில் ஏற்படும் வறட்சியை குறைப்பதால் முடி உதிர்வும் குறைகிறது.
சூடான நீர் / ஹேர் ட்ரையர் சூடான நீரில் குளிப்பதை ஒரு சிலர் பழக்கமாக வைத்திருப்பார்கள். அதே பழக்கத்தில் தலைக்கும் சுடுதண்ணீரை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது மயிர்க்கால்களில் உள்ள பி.ஹெச் அளவை பாதிக்கலாம்.

இதனால் தலையில் பொடுகு, மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடனே குளிர்காலத்தில் நீங்கள் சுடுதண்ணீர் பயன்படுத்தமாட்டீர்களா? குளிர்ந்த நீரில் எப்படி குளிக்க முடியும் என நீங்கள் கேட்கலாம்.
முடிந்தவரை நீங்கள் குளிக்கும் தண்ணீர் அறை வெப்பநிலையில் இருப்பது நல்லது. அல்லது மிதமான வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தலாம். தலைக்கு ஹேர் ட்ரையர் பயன்படுத்துபவர்கள் முடிந்தவரை வெப்பநிலையை அதிகப்படியாக இல்லாமல் அளவாக வைத்து கொள்வது முடி உதிர்வை தடுக்கும்.
ஈரமான தலை முடியில் சீப்பை பயன்படுத்துவது பெண்கள் பெரும்பாலும் வீட்டில் வேலையை முடித்து விட்டு பின் குளித்து அலுவலகத்திற்கு கிளம்புவார்கள். கிளம்பும் அவசரத்தில் ஈரமாக இருக்கும் தலையில் நேரடியாக சிப்பை பயன்படுத்திவிடுவார்கள்.
தலைமுடி ஈரமாக இருக்கும் போது மென்மையாகவும் எளிதில் உடையும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். நாம் அப்போது சீப்பை பயன்படுத்துவது அதிகப்படியான முடி உதிர்வை ஏற்படுத்தும். அவசரத்தில் கட்டாயம் சீப்பை உபயோகித்து தான் ஆக வேண்டும் என்றால் முடிந்தவரை பெரிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள். முடியின் நுனிப்பகுதியில் துவங்கி மேற்பகுதி வரை மிக மென்மையாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.









