தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதுடன், பெரும் சிரமத்துக்கு மத்தியில் சிகிச்சைகளைப் பெறுவதாக நோயாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள ஒரேயொரு தேசிய கண் வைத்தியசாலை கொழும்பு மருதானை டீன்ஸ் வீதியில்  அமைந்துள்ளது. நாளாந்தம் பெருமளவான நோயாளர்கள் வெளியூர்களில் இருந்து கண் நோய்க்கான சிகிச்சைகளை  பெறுவதற்காக வருகின்றனர்.

அவ்வாறு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தரும் ஏராளமான  நோயாளர்களுக்கான இடவசதி போதுமானதாக இல்லை. நோயாளர்கள் இதனால் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரின் முதற்கொண்டு பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியதாக தெரியவில்லை. நாளந்தம் இவ்வாறானதொரு சிரமான நிலையில் பொதுமக்கள் மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

அதிகாலை 4 மணியிலிருந்தே வெளிநோயாளர் பிரிவுக்கு நோயாளர்கள் வருகை தருவதை காணக் கூடியதாக உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தே சிகிச்சைகளை பெறுகின்றனர்.

அவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் வைத்தியசாலையினுள் முறையாக நடத்தப்படுவதில்லை என நோயாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். நோயாளர்கள் முறையாக வரிசைப்படி வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்படுவதில்லை.

வெளிநோயாளர் பிரிவில் ஒன்றிலிருந்து  பல  இலக்கங்கள்  பொறித்த அறைகளில்  நோயாளர்களுக்கான  கண் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

பரிசோதனை நடத்தும் வைத்தியர்கள் மிகவும் பொறுமையாக நோயாளர்களுடன்  கனிவாக நடந்து கொள்கின்றனர். அவர்களின் சேவையில் எந்தவிதமான குறையும்  கூறுவதற்கில்லை  எனவும், அவர்கள் தமது பணியை மிகவும் பொறுப்புடன் மேற்கொண்டு  வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் பணிபுரியும் ஒருசில தாதியர்கள், உதவியாளர்கள் மற்றும்  பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நோயாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவ தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

வயது வேறுபாடின்றி அனைவரும் தரக்குறைவாக நடத்தப்படுவது வேதனைக்குரிய விடயமாகும். வசதியற்ற, வறுமைப்பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களே  தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருகின்றனர்.

ஆகையால் வைத்தியசாலை நிர்வாகத்தினரின் உட்பட சுகாதார சேவையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து,  இவ்வாறான கெடுபிடிகளிலிருந்து  நோயாளர்களைக் காப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here