மட்டக்களப்பு வேப்ப வெட்டுவான் பாலர்சேனை கிராமத்தில் காணப்படும் சங்குல குளத்தை அண்டிய பாலர் சேனை கிராமத்தில் சுமார் 412 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்து வரும் மக்கள் பிரதானமாக குடிநீருக்காகவும், விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தங்கள் ஜீபனோபாய தொழில்களுக்காகவும் இந்த சங்குல குளத்தை நம்பி வாழ்கின்றனர்.

பிரதான நீர் ஆதாரங்களுக்கென கோடை காலங்களில் இந்த மக்கள் இக் குளத்தையே நம்பி இருப்பதால் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பதவி வகித்த காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தக் குளம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்பு சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், இராஜாங்க அமைச்சர் போன்ற மக்கள் பணிகளை ஆற்றிய காலப் பகுதியில் இக் குளத்தை மேலும் புனரமைப்பதட்காக 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனூடாக குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த சகோதர இன நபர் ஒருவர் குளத்தின் நீரேந்தல் பகுதிக்குள் தனக்கு உரிய காணி இருப்பதாக கூறி விடயத்தை திரிவுபடுத்தி வழக்கு தொடுத்ததன் ஊடாக பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அடாத்தாக குளத்தின் நீரேந்தல் பகுதியில் காணிகளை கையகப்படுத்துவதற்காக தனது சமூகம் சார்ந்த அரசியல் பலத்தைக் கொண்டு முற்படும் ஏறாவூரை சேர்ந்த இந்த நபர் தடுப்பணைகளை அடாவடித்தனமாக உடைத்து சேதப்படுத்தி நீரை வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குளத்தின் நீர் தற்போது வீண் விரயமாக வெளியேறி வருகிறது. குளத்திலுள்ள நீர் இவ்வாறு வெளியேற்றப்படுமாக இருந்தால் தாம் நீர்தாட்பாடு காரணமாக இக் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டிய அபாயம் ஏற்படும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here