ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளமை பாரியதொரு தவறு என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு உள்நாட்டு மாணவர்களைச் சேர்ப்பதை நிறுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மருத்துவப் பட்டப்படிப்பு இலங்கை மருத்துவ சபையால் அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்கை நெறியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருத்துவப் படிப்பினால் நாட்டிற்கு அமெரிக்க டொலர்கள் ஈட்டப்படுகின்றன நாட்டில் உள்ள மருத்துவ மாணவர்கள் இந்தப் பட்டப்படிப்பைத் தொடரும் வாய்ப்பை இழப்பதன் மூலம் பாதகமான பல விடயங்கள் நடக்கும்.

இந்தப் பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் சுமார் 139 இலட்சம் ரூபாவை செலவிடுகின்றனர்.

இதை நிறுத்துவதன் மூலம், 400 முதல் 500 இலட்சம் ரூபாய் வரையில் வெளிநாடுகளில் செலவிட்டு பட்டம் பெற வேண்டிய நிலை ஏற்படும்.

இதற்கான செலவுகள் டொலர்களில் நடப்பதால், நாட்டில் தக்கவைக்கக்கூடிய டொலர்களின் அளவும் இழக்கப்படுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவப் படிப்பைப் கற்கும் பெரும்பாலான மாணவர்களுக்குக் கிழக்கு, சப்ரகமுவ, ஊவா போன்ற பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வியின் கீழ் மருத்துவப் பட்டங்களைப் படிக்க வாய்ப்பு இருந்தாலும், அவர்கள் தொலைதூரத்தில் இருப்பதால் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை நாடுகின்றனர்.

இதன் விளைவாக, குறித்த பல்கலைக்கழகங்களில் மேலதிக மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்புகள் கிட்டுகின்றன.

கொத்தலாவல மருத்துவ பீடம் மூடப்படுவதால் மாணவர்களின் இலவசக் கல்விக்கான பல வாய்ப்புகளும் இழக்கப்படுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here