இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் 3 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றிரவு போலண்ட் மைதானதில் நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் KL ராகுல் தலைமையிலான இந்தியா அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பாக சஞ்சு சாம்சன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
மேலும், திலக் வர்மா 52 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 38 ஓட்டங்களையும் தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் பியூரன் ஹென்றிக்ஸ் 3 விக்கட்டுக்களையும், நன்றே பெர்கர் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
297 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 45.5 ஓவர்களில் 218 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
தென்னாபிரிக்கா சார்பாக டொனி டி ஷொர்ஷி அதிகபட்சமாக 81 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சியில் அர்ஸ்தீப் சிங் 4 விக்கட்டுக்களையும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, தொடரின் நாயகனாக இந்திய அணி வீரர் அர்ஸ்தீப் சிங் தெரிவாகியிருந்தார்.