நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய நேற்று (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
Peko Trail பாதையினூடாக ஜனாதிபதி நடைபயணமாக இப்பகுதிளை மேற்பார்வை செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Peko Trail பாதையினூடாக 3.2 கி.மீ தூரத்திற்கு நடைப் பயணமாக சென்ற ஜனாதிபதி கோர்ட் லொட்ஜ் தோட்ட மக்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் கல்வி, சுகாதார பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியிருந்த ஜனாதிபதி, உயர்தரத்தின் பின்னரான அப்பகுதி பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் ஆராய்ந்தார்.
அதனையடுத்து தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
கோர்ட் லொட்ஜ் தோட்டத்தில் “Light Bright” என்ற நாமத்திலான தேயிலை வகை உற்பத்திச் செய்யப்படுவதோடு, அங்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி தொழிற்சாலை ஊழியர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இப்பகுதியின் ஊடாக மலையேறும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவையான தேநீர் கோப்பை ஒன்றை அருந்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது..
அருமையான சுற்றுலா அனுபவத்தை தேடிச் செல்லல் உள்ளிட்ட புதிய சுற்றுலாச் செயற்பாடுகளை இலங்கைக்குள் வலுப்படுத்தல், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
Peko Trail வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உதவியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்த மிகேல் குணாட், சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.