இரு பலஸ்தீன தாக்குதல்தாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் ஜெரூசலத்திற்கான நுழைவாயிலில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வாகனத்தில் வந்த துப்பாக்கிதாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சூடு நடத்தியதாகவும் கிழக்கு ஜெரூசலத்தைச் சேர்ந்த இரு தாக்குதல்தாரிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த இடத்திற்கு அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்ததுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான இஸ்ரேலிய பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இத்தாக்குதலிற்கு ஹமாஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.