கொழும்பு, யூனியன் பிளேஸ் – பார்க் வீதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய இரண்டு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவும் அவரது மனைவியுடன் வந்திருந்த குழுவினர் இந்த மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட இவர்களில் ஒருவரின் கையில் அணிந்திருந்த ஆபரணம் ஒன்று தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
களியாட்ட நிலைய முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டுக்கு இணங்க சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்
எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்ற போது யோஷிதவும் அவரது மனைவியும் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் ஒரு பாதுகாப்பு காவலர் காயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.