பங்களாதேஷ்க்கு எதிராக இலங்கை விளையாடவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாதவாறு சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
ஐசிசி ஒழுக்கக் கோவைக்கான 2ஆம் நிலை மீறல்களில் வனிந்து ஹசரங்க ஈடுபட்டதால் அவருக்கான தகுதி நீக்கப் புள்ளிகள் 24 மாத காலப்பகுதியில் 8ஆக உயர்ந்ததை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் கடந்த மாதம் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச T20 தொடரின் இறுதிப் போட்டியின் போது ஐசிசி ஒழுக்கக் கோவையை ஹசரங்க மீறியமைக்காக 3 தகுதிநீக்கப் பள்ளிகள் வழங்கப்பட்டு பங்களாதேஷுடனான முதல் இரண்டு T20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வீரர் 4 தகுதிநீக்கப் புள்ளிகளைப் பெற்றால் 2 டெஸ்ட் போட்டிகளில் அல்லது 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அல்லது 4 சர்வதேச T20 போட்டிகளில் விளையாட முடியாதவாறு தடை விதிக்கப்படும்.
வனிந்து ஹசரங்கவுக்கு டேஸ்ட் போட்டிகள் முதலில் வருவதால் அப் போட்டிகளில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஸ்ஷ்க்கு எதிரான போட்டியின் 37ஆவது ஓவர் முடிவில் நடுவர் ஒருவரிடமிருந்து தனது தொப்பியைப் பறித்தெடுத்த வனிந்து ஹசரங்க போட்டியில் நடுவரை கேலி செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆற்றல்களை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்துடன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும் தெரிவாளர்கள் அவரை டெஸ்ட் குழாத்தில் இணைத்துக்கொண்டதால் அவருக்கு ஐசிசி T20 உலகக் கிண்ணப் போட்டியில் தடைக்குட்படாமல் விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆனால், அதற்கிடையில் ஐசிசி ஒழுக்கக் கோவையை மீறக்கூடிய எந்தவொரு வம்பிலும் ஹசரங்க சிக்காமல் இருப்பது அவசியமாகும் என கிரிகெட் விமசர்கள் தெரிவித்துள்ளனர்.