வல்லாட்சியில் சீனக் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாழில் இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
கிடைக்கின்ற வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் தெரிவித்த கருத்தை கோடிட்டுக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ் மாவட்டத்தில் சீனர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் நல்லாட்சியில் கடலட்டை குஞ்சு உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட சீன நிறுவனமும், தற்போதை வல்லாட்சி காலத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நூறு வீதம் யாழ் மாவட்டத்தினை சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சிறப்பான பொருளாதார நன்மைகளை வழங்கிவரும் கடலட்டை உற்பத்திகளை மேலும் விரிவாக்கம் செய்து முன்கொண்டு செல்வதற்கு, பண்ணையாளர்கள் நடைமுறை ரீதியாக உணர்ந்து கொண்ட சவால்களுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுதாகரன், நெக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ், வேலணை பிரதேச செயலர் சிவகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது கடலட்டை பண்ணையாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் உரையாற்றுகையில்
பொய்களுக்கு மக்கள் இடங்கொடுக்காது வெளிப்படையான உண்மைகளை இனங்கண்டு எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அவசியமானதாகும்.
எமது மக்களே எமது பிரதேசங்களின் வளங்களை பயன்படுத்தி உச்ச பயன்களை பெறவேண்டும். அதுவே எனது எதிர்பார்ப்பாகும் என்று கூறியுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
![]()