ஏறாவூர் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும் அங்கு இதுவரையில் அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏறாவூர் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும், கிராமிய வைத்தியசாலைக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமைதான் அங்கு காணப்படுகிறது.
சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் திறந்து ஒரு வருடப் பூர்த்தியான நிலையிலும், இன்னும் அதற்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலைமை காணப்படுகிறது.
அதை இயங்க வைப்பதற்கு 160kv சக்தி கொண்ட ஒரு மின் பிறப்பாக்கி தேவையாக உள்ளது.
மாகாண அமைச்சினால் அதற்கான கேள்வி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தும் கூட, அவர்கள் இன்னும் அந்த மின் பிறப்பாக்கியை விடுவிப்பதாகக் கூறி காலதாமதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இது தொடர்பில் கூடிய கவனம் எடுத்து, அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து தருமாறு சுகாதார அமைச்சர்களுக்குக் கோரிக்கை விடுத்ததாகவும் மொஹமட் சாலி நளீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.







