சமுத்திரவியல் கற்கைகளுக்கான பிராந்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையானது, இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) உறுப்புநாடாக சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்பாக மேற்கொண்டுள்ள பல்வேறு தொடக்க முயற்சிகளைக் கருத்திற் கொண்டு, பொதுவான கற்கைகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிவுசார் விடயங்கள் மற்றும் நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் “பிராந்திய சமுத்திரவியல் கற்கை நிலையம்” இலங்கையில் நிறுவுவது மிகவும் பொருத்தமானதென பிரான்ஸ் அரசு அடையாளங்கண்டுள்ளது.
முன்மொழியப்பட்ட நிலையத்தை, ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் தாபிப்பதற்கும், அதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை திருகோணமலை கப்பல்துறை மற்றும் சமுத்திரவியல் கல்லூரி மூலம் பெற்றுக்கொள்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, உத்தேச “பிராந்திய சமுத்திரவியல் கற்கை நிலையம்” தாபிப்பதற்கு ஏற்புடைய இலங்கை அரசு மற்றும் பிரான்ஸ் அரசுக்கிடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








