135 நபர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட அரசுக்கு சொந்தமான விவசாய நிலங்களை மீட்க அரசாங்கம் தயாராகி வருவதாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.

அரசாங்க விவசாய நிலங்களை குத்தகை அடிப்படையில் பெற்று, ஆனால் அவற்றில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளாத 135 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த நிலங்களை மீட்டு உற்பத்தி விவசாய நடவடிக்கைகளுக்கு ஒதுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயிர்ச்செய்கை மற்றும் விவசாய முதலீடுகளுக்காக குத்தகைக்கு விடப்பட்டும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் விவசாய நிலங்களை மீட்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், இவ்வாறான நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களின் நிபந்தனைகள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப மீட்கப்படும்.

மீட்கப்படும் நிலங்கள் பின்னர் உற்பத்தி விவசாய திட்டங்களை மேற்கொள்ளக்கூடிய நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

விவசாய நிலங்களை நீண்ட காலம் தரிசாக வைத்திருப்பது, நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இழக்கச் செய்வதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, புதிய முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு மேலதிக வருமான வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான விவசாய நிலங்களின் உண்மையான மதிப்பு, அவை குத்தகை ஒப்பந்தங்களின் கீழ் வைத்திருப்பதில் மாத்திரம் இன்றி, தேசிய உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவை அளிக்கும் பங்களிப்பில் தங்கியுள்ளது என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here