அரசாங்க வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை என்பதை பொறுப்புடன் உறுதிப்படுத்துவதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு மேலும் அவர் தெரிவித்தாவது,
அரசாங்கத்தின் ஊடாக தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு எவ்வித வழிமுறைகளும் இல்லை. நோயாளிகள் எவ்வித அச்சமும் இன்றி அரச வைத்தியசாலையில் வழங்கப்படும் மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.
சுகாதார அமைச்சு அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்யாது. தான் சுகாதார அமைச்சராகப் பணியாற்றும் வரையிலும், எனது அதிகாரிகள் பணிபுரியும் வரையிலும் சட்ட விரோதமான அல்லது தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்யும் செயல்களில் ஈடுபடமாட்டோம்.
தரம் குறைந்த எந்த மருந்துகளும் கொள்வனவு செய்யப்படாது. அதேபோன்று இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள் எக்காரணம் கொண்டும் இந்த நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம்.
இலங்கைக்குள் மருந்துகள் கொண்டுவரப்பட வேண்டுமென்றால் குறித்த மருந்து மற்றும் அதனை கொண்டுவருபவர்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்து அனுமதி கிடைத்தால் மாத்திரமே அவற்றை இலங்கைக்கு கொண்டுவர முடியும்.
சுகாதார அமைச்சால் அடையாளம் காணப்பட்ட 862 மருந்துகள் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள மருந்துகளாக இருந்தால் அவற்றுக்கு மிக விரைவாக பதிவை வழங்க முடியும்.
இது உலக சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். அதன் மூலம் தான் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்போது அந்த மருந்துகளின் தரம் குறித்து எந்த பிரச்சினையும் இருக்காது.
இந்தியாவில் இருந்து உயர்தர மருந்துகளை கொள்வனவு செய்ய பேச்சுகளை நடத்தி வருகிறோம். ஆனால் இறுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.” என்றார்.







