களுத்துறை – இங்கிரிய பகுதியில் லொறி ஒன்றையும் அதில் பயணித்த நால்வரையும் வலுக்கட்டாயமாக கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இங்கிரிய மேல் பிரிவைச் சேர்ந்த நபரின் வாகனமே இவ்வாறு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில்,

முறைப்பாட்டாளர் கடந்த ஆறு ஆண்டுகளாக அட்டைப் பெட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்காக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடி 5 லட்சம் ரூபாய்க்கு மெக்சிமோ வகை லொறியை தவணை முறையில் வாங்கியிருந்தார்.

தவணைகளைக் காலத்திற்கு செலுத்த முடியாததால், குத்தகை நிறுவனம் வாகனத்தை பறிமுதல் செய்தது.

பின்னர், லொறியை மீட்டுக்கொள்வதற்காக இங்கிரிய நம்பபனவை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரிடம் இருந்து 11 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

பிறகு, லொறிக்கான புதிய குத்தகை வசதியை பெறும்போது, முதல் கட்டமாக 1 லட்சம் 25 ஆயிரம் ரூபாய் சந்தேக நபருக்கு வழங்கியிருந்தார்.

இரண்டு மாதங்களாக வட்டியை பெற முடியவில்லை என்ற காரணத்தால், சந்தேக நபரும் அவரது கணவரும் மோட்டார் சைக்கிளில் வந்து, மஹா இங்கிரிய கல்லறை அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை வலுக்கட்டாயமாக கைப்பற்றியுள்ளனர்.

அதன் போது லொறியில் பயணித்த நால்வரையும் இணைத்தே கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இங்கிரிய பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here