10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்மீன் திரளில் இருந்து உருவான, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பழமையான வேகமான ரேடியோ வெடிப்பைக் கண்டுபிடித்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இலங்கை விஞ்ஞானி தெமிய நாணயக்கார பங்கேற்றுள்ளார்.
சயன்ஸ் (Science) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பு, பிரபஞ்சத்தின் பரிணாமம் மற்றும் கோஸ்மிக் வலை என்று அழைக்கப்படும் பரந்த பொருள் வலையமைப்பை வானியலாளர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
சிட்னி பல்கலைக்கழக வானியற்பியலாளர் கலாநிதி மனிஷா காலேப் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவில், ஆய்வின் இணை ஆசிரியராக அடையாளம் காணப்பட்ட நாணயக்காரவும் இடம்பெற்றிருந்தார்.
FRB 20240304B என்று பெயரிடப்பட்ட மர்மமான வெடிப்பு, முதன்முதலில் 2024 இல் தென்னாப்பிரிக்காவில் உள்ள (மீர்காட்) MeerKAT ரேடியோ தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து விஞ்ஞானிகள் நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி பிக் பேங்கிற்கு மூன்று பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குறித்த ஒரு சிறிய, தீவிரமாக நட்சத்திரங்களை உருவாக்கும் விண்மீன் மண்டலத்திற்கான சமிக்ஞையைக் கண்டுபிடிதுத்துள்ளனர்.
வேகமான ரேடியோ வெடிப்புகள் என்பது சில மில்லி விநாடிகள் மட்டுமே நீடிக்கும் ரேடியோ அலைகளின் மிகவும் சக்திவாய்ந்த ஒளி (ஃபிளாஷ்கள்) ஆகும். அவற்றின் குறுகிய கால அளவு இருந்தபோதிலும், அவை சூரியன் பல நாட்களில் உற்பத்தி செய்யும் அளவுக்கு ஆற்றலை வெளியிடும்.
இந்த வெடிப்புகள் மேக்னடார்கள் எனப்படும் அதிக காந்தமயமாக்கப்பட்ட நியூட்ரான் நட்சத்திரங்களிலிருந்து உருவாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள், இருப்பினும் அவற்றின் துல்லியமான தோற்றம் நிச்சயமற்றதாகவே உள்ளது.
ஆஸ்திரேலியாவின் ABC நியூஸிடம் பேசிய கலாநிதி காலேப், இந்த கண்டுபிடிப்பை அசாதாரணமானது என விவரித்தார், சூரியனும் சூரிய மண்டலமும் இருப்பதற்கு பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சமிக்ஞை தனது பயணத்தைத் தொடங்கியது என்று குறிப்பிட்டார்.
தொலைதூர வேகமான ரேடியோ வெடிப்புகள் பிரபஞ்சத்தின் சாதாரண பொருளின் பெரும்பகுதியைக் கொண்ட ஒரு பரந்த கட்டமைப்பான கோஸ்மிக் வலையை வரைப்படமாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புவதால் இந்த கண்டுபிடிப்பு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.
பில்லியன் கணக்கான ஆண்டுகளில் விண்மீன் திரள்கள் மற்றும் பொருள் எவ்வாறு உருவானது என்பது குறித்த புதிய நுண்ணறிவுகளை இந்த கண்டுபிடிப்புகள் வழங்கும் என்று சர்வதேச ஆராய்ச்சி குழு நம்புகிறது.








